9 மலைக்கிராமங்களில் முதற்கட்ட ஆய்வு

சமுதாய உரிமைகள் வழங்குவது குறித்து 9 மலைக்கிராமங்களில் முதற்கட்டமாக ஆய்வு நடத்த வன உரிமைக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Update: 2022-12-01 18:45 GMT

பொள்ளாச்சி

சமுதாய உரிமைகள் வழங்குவது குறித்து 9 மலைக்கிராமங்களில் முதற்கட்டமாக ஆய்வு நடத்த வன உரிமைக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டம்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மலைக்கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கு உரிமை சட்டத்தின்படி சமுதாய உரிமைகள் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பழங்குடியின மக்கள் என்னென்ன பொருட்களை சேகரிக்கின்றனர். அதற்குரிய இடங்களை கண்டறிய முதற்கட்டமாக ஆய்வு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம், ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் தணிகவேல், வனச்சரகர்கள் புகழேந்தி, மணிகண்டன், வெங்கடேஷ், சுந்தரவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

9 கிராமங்கள் தேர்வு

வன உரிமை சட்டத்தின் கீழ் சமுதாய உரிமைகள் வழங்குவது குறித்து வன உரிமைக்குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வனத்திற்குள் சென்று எந்தெந்த சிறு வன மகசூல் பொருட்களை சேகரிக்கின்றனர் என்பது குறித்து தெரிவித்தனர். இந்த பொருட்கள் எந்தெந்த இடங்களில் கிடைக்கிறது என்பது குறித்து பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.

அந்த இடங்களில் அந்த பொருட்கள் உள்ளதா என்று கண்டறிய முதற்கட்ட ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. இதற்காக வெள்ளிமுடி, காடம்பாறை, பரமன்கடவு, நெடுங்குன்றா, சங்கரன்குடி, கூமாட்டி, நாகூரூத்து-1, நாகூரூத்து-2, கவர்க்கல் ஆகிய 9 மலைக்கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த கிராமங்களில் என்னென்ன பொருட்கள் எங்கு கிடைக்கிறது என்று கண்டறிந்து செயல்திட்டம் வகுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்