மதுபோதையில் பணி செய்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
மதுபோதையில் பணி செய்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். கள்ளச்சாராய விற்பனை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தவறிய காவலர்கள் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுவரை 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பணியினை முறையாக செய்யாத போலீசார் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி கீழ்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் என்பவர் பணியின் போது குடிபோதையில் இருந்ததாக புகார் வந்தது.
எனவே பணியை முறையாக மேற்கொள்ளாத அவரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.