17-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு - நெல்லையில் பரபரப்பு
17-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.;
நெல்லை,
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 43). இவர் நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக (ஏட்டு) பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், ராஜகோபால் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர், இதுபற்றி நெல்லை புறநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், தலைமை காவலர் ராஜகோபாலை கடந்த 5-ந் தேதி மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில் போலீஸ் ஏட்டு ராஜகோபால், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதனையடுத்து அனைத்து மகளிர் போலீசார் ஏட்டு ராஜகோபால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் விசாரணை நடத்தி ஏட்டு ராஜகோபாலை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.