போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

கோவை நகரில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-05-13 21:45 GMT

கோவை நகரில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

போதைபொருள் கடத்தல் கும்பல்

கோவை நகரில் பல்வேறு பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை மருந்து விற்பனை செய்து வந்த கும்பலை சேர்ந்த சுஜி மோகன் (26) புல்லி பிரவீண் (26) பிரசாந்த் (26), அமர்நாத் (25) மற்றும் அஸ்வின்குமார் (26), பிரவீன்ராஜ். (27), வடவள்ளி பிரதீப் (26) ஆகிய 7 பேரை கோவை போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சுந்தரா புரம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த போலீஸ்காரர் ஸ்ரீதர் (29) திட்டம் போட்டுக் கொடுத்து கடத்தல் மற்றும் விற்பனைக்கு உதவியது தெரியவந்தது.

போலீஸ்காரர் ஸ்ரீதர்

மேலும் போலீஸ்காரர் ஸ்ரீதர் போதை கும்பலுடன் வாட்ஸ் அப் காலில் பேசி வந்துள்ளார். அவர், போலீசார் எங்கு எப்போது ரோந்து வருவார்கள்? போதை மருந்தை எப்படி கடத்தி வர வேண்டும்? யாரிடம் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும்? என திட்டமிட்டு வகுத்து கொடுத்து போதை கும்பலை வழி நடத்தியுள்ளார்.

போதை கும்பலை சேர்ந்த சுஜி மோகன் உள்ளிட்டோர் வாட்ஸ் அப் காலில் ஸ்ரீதர் பேசியதை மற்றொரு செல்போனில் பதிவு செய்துள்ளனர். இந்த பதிவு போலீசாரின் விசாரணையின் போது சிக்கியது.

ஸ்ரீதர் போதை மருந்து கஞ்சா கடத்தல் கும்பலிடம் சமீபத்தில் ரூ.1.60 லட்சம் வாங்கியதும், அந்த பணத்தில் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஜாலியாக செலவு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பணியிடை நீக்கம்

இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், போலீஸ்காரர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரது செல்போன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவருக்கும் ரவுடிகள், போதை கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே போலீஸ்காரர் ஸ்ரீதர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சிறையில் உள்ள போலீஸ்காரர் ஸ்ரீதரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் போதை கும்பலுடன் தொடர்பில் இருந்து உதவிய போத்தனூர் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த வக்கீல் ஆசிப் (24) கைது செய்யப்பட்டு உள்ளார்.

அவர் போதை மருந்து விற்பனை கும்பலுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளார். அவர் போதை கும்பனுடன் நடனமாடிய வீடியோக்களும் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்