அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ஏ-பிளஸ் தரச்சான்று

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ஏ-பிளஸ் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது என்று துணைவேந்தர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-06-22 18:56 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த மார்ச் மாதம் அசாம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கந்தர்ப்பகுமார் தேகா தலைமையிலான குழுவினர் தர மதிப்பீடு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, அதற்கான அறிக்கையை தேசிய தர மதிப்பீட்டு குழுவிடம் சமர்ப்பித்தனர். ஆனால் தர மதிப்பீடு முடிவு வெளியிடப்படாமல் மீண்டும் ஒரு குழு ஆய்வு செய்யும் என தேசிய தர மதிப்பீட்டு நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து கடந்த 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வரராவ் தலைமையிலான குழுவினர் 2-வது முறையாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து, அதற்கான அறிக்கையை தேசிய தர மதிப்பீட்டுக் குழுவிடம் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு 4-க்கு 3.38 மதிப்பெண்ணுடன் ஏ-பிளஸ் தரச்சன்று தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த தரச்சான்றானது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஓய்வில்லா கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகும். குறிப்பாக இதற்கு முன்பு பெற்றிருந்த ஏ-பிளஸ் (3.09) தரச்சான்றுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்