பிளஸ்-2 மாணவிக்கு குழந்தை பிறந்தது
குன்னூரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஊட்டி,
குன்னூரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பாலியல் பலாத்காரம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் கே.எம்.கே. தெரு பகுதியை சேர்ந்தவர் தம்பா என்ற குணசேகரன் (வயது 25). இவருக்கும், ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. இதற்கிடையே மாணவியை ஆசைவார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று குணசேகரன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் மாணவிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் வயிறு வலி அதிகமானதால், அந்த மாணவியை பெற்றோர் உடனடியாக குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாணவியை சோதனை செய்து பார்த்ததில், பிளஸ்-2 மாணவி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
போக்சோவில் வழக்கு
மேலும் மாணவியின் உடல்நிலை பாதுகாப்பு கருதி மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் குணசேகரன் (வயது 25) கடந்த மார்ச் மாதம் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. மேலும் குணசேகரன் நீண்ட நாட்களாக அந்த மாணவியுடன் பழகி வந்ததும், ஏற்கனவே தெரிந்தவர் என்பதால் மாணவியுடன் பழகியதை யாரும் தவறாக நினைக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து குணசேகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.