கிராமப்புறங்களில் போதை பொருட்கள் விற்பனையை ஒழிக்க வேண்டுகோள்
கிராமப்புறங்களில் போதை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லிணக்கம் உருவாக்கும் நோக்கத்தில் "கிராம காவல் திட்டம்" தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. மேற்படி தொடங்கப்பட்ட குழுவின் விவரங்களும், ஒவ்வொரு போலீசாரின் வேலை என்ன? என்பதையும் எடுத்துரைப்பதற்காக இந்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில் நடைபெற்றது. மேலும் கிராம காவலர்கள் வாட்ஸ் அப் குழுவில் இணைத்துள்ள கிராம பொதுமக்களில் 2 நபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கிராம காவல் திட்டத்தின் பயன்கள் குறித்தும், பொதுமக்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்றும் கூறினர்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கிராம காவல் திட்டம் தொடங்கப்பட்டதின் நோக்கம் குறித்தும், போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நிகழும் தகவல் பரிமாற்றத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். மேலும் கிராமப்புறங்களில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை முற்றிலும் ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் தங்களது பங்களிப்பை கிராம போலீசாருக்கு கொடுக்க வேண்டும், என்றார். இதில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பழனிசாமி, தங்கவேல், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.