பேரையூர் அரசு பெண்கள் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பேரையூர்
பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விளையாட்டு மைதானம்
பேரையூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1965-ல் தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை 1027 மாணவிகள் படித்து வருகின்றனர். வருடம் தோறும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் மாணவிகள் 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று வருகின்றனர். படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டிலும் மாநில அளவில் இப்பள்ளி மாணவிகள் சாதித்து வருகின்றனர். குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து ஐந்து வருடம் மாநில அளவில் இப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று வருகின்றனர். ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல் போட்டியிலும் மாவட்ட மற்றும் மாநில அளவில் மாணவிகள் வெற்றி பெற்று வருகின்றனர்.
படிப்பிலும், விளையாட்டிலும் பல்வேறு சாதனை புரிந்து வரும் இந்த பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் குத்துச்சண்டை மற்றும் ஓட்டப்பந்தய பயிற்சிக்கு பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. மற்றும் சேடப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானங்களுக்கு சென்றுதான் பயிற்சி பெறும் நிலை உள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை என்பதால் மாணவிகளின் விளையாட்டு ஆர்வம் பள்ளியோடு முடங்கி விடுகிறது. மதுரையில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியில் இப்பள்ளி மாணவிகள் லெசிம் என்ற கலைநிகழ்ச்சியில் ஆண்டுதோறும் பங்கு பெறுவார்கள். அவர்களுக்கான முறையான பயிற்சியை கூட இப்பள்ளியில் கொடுக்க முடியாத நிலை உள்ளது. இப்பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று பேரையூர் பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, இனியாவது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.