'தமிழ்நாடு நாள்' விழாவையொட்டி அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
தமிழ்நாடு நாள் விழாவையொட்டி தேனியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
'தமிழ்நாடு நாள்' விழாவையொட்டி மாணவ-மாணவிகளின் ஊர்வலம் மற்றும் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, தேனியில் நேற்று நடைபெற்றது. தேனி பங்களாமேட்டில் தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலம் மதுரை சாலை வழியாக சென்று புதிய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு, தமிழ்நாடு நாள் விழா தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். அவர்களுடன் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளும் ஊர்வலமாக சென்றனர்.
பின்னர், புதிய பஸ் நிலைய வளாகத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது. அந்த கண்காட்சியை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதன்பிறகு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் சிலம்பாட்டம், தப்பாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி மகாராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, தேனி அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.