அரசு பஸ் மீது கல்வீசிய வழக்கில் 15 வருடங்களாக தலைமறைவாக இருந்தவர் கைது

அரசு பஸ் மீது கல்வீசிய வழக்கில் 15 வருடங்களாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-25 19:55 GMT

திசையன்விளை:

திசையன்விளை அருகே வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகன் மைக்கேல்ராஜ் (வயது 42). இவர் 1998-ம் ஆண்டு அரசு பஸ் மீது கல்வீசி சேதப்படுத்திய வகையில் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துவிட்டு 2008-ம் ஆண்டு தலைமறைவு ஆகிவிட்டார். ஐகோர்ட்டு, கீழ் கோர்ட்டு தண்டனையை உறுதிசெய்தது. தலைமறைவான அவரை போலீசார் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் தேடி வந்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களது உறவினர்களிடமும் தொடர்பு இல்லாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் அவர் சென்னை ஆவடி பகுதியில் உள்ள பெண்ணை திருமணம் செய்து குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாக பேலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ், ஏட்டுக்கள் தங்கராஜ், சின்னத்துரை ஆகியோர் மாறுவேடத்தில் சென்று அந்த பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருவேற்காடு பகுதியில் பிட்டராக வேலை செய்து வருவது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து திசையன்விளைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த போலீசாரை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், வள்ளியூர் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்