எடப்பாடி அருகே காரில் வந்து மான் இறைச்சி விற்றவர் கைது-நண்பர் தப்பிஓட்டம்

எடப்பாடி அருகே மான் இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அவரது நண்பரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.;

Update: 2022-12-24 22:47 GMT

எடப்பாடி:

மான் இறைச்சி விற்பனை

எடப்பாடி-ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் உள்ள ஆவணியூர் சாலைசந்திப்பில் நேற்று 2 பேர் சொகுசு காரில் வந்து மான்இறைச்சி விற்பனை செய்து வருவதாக எடப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் அப்பகுதியில் போலீசார் திடீரென வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகபடும் படியாக சொகுசு காருடன் நின்றிருந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை செய்ய முயற்சித்தனர். போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். உடனே காரின் அருகே நின்று கொண்டிருந்த மற்றொரு நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

ஒருவர் கைது

போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர் கடலூர் மாவட்டம், சிறுபாக்கம், வடக்குதெரு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் தானுவேல் என்பதும், அவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான பழனி என்பவருடன் சேர்ந்து, கடலூர் மாவட்டம் நயினார்பாளையம் வனப்பகுதியில் வேட்டையாடிய 2 மான்களை கறியாக வெட்டி, சொகுசு கார் மூலம், எடப்பாடி அடுத்த ஆவணியூர் பகுதியில் கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இது குறித்து மேட்டூர் வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வனச்சரகர் சிவானந்தம் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து, மான் இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட நபர் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மான் இறைச்சியை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மான் இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தப்பி ஓடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

எடப்பாடி பகுதியில் மான் இறைச்சி விற்பனை செய்த நபர் பிடிபட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்