திருப்பூர்
தளி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
பெண் பலாத்காரம்
திருப்பூர் மாவட்டம் தளி அருகே உடுக்கம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 41). கூலித்தொழிலாளி. இவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டில் 30 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோருடன் குடியிருந்தார். கடந்த 8-9-2018 அன்று அந்த பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, முருகன் வீட்டுக்குள் சென்று அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உடுமலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
ஆயுள் தண்டனை
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக முருகனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.