பஸ் படிக்கட்டில் தொடரும் ஆபத்தான பயணம்

படியில் பயணம் நொடியில் மரணம். இது பஸ்சில் பயணிப்பவர்களுக்காக பஸ்களில் எழுதப்பட்டுள்ள எச்சரிக்கை வாசகம். ஆனால், இந்த எச்சரிக்கையை பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஒருபோதும் மதித்து நடப்பதாக தெரியவில்லை.

Update: 2023-01-19 18:55 GMT

படிக்கட்டில் பயணம்

பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் புறப்பட்டு செல்லும்போது வேகமாக ஓடிச்சென்று ஏறுவது, ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கிக்கொண்டே பயணம் செய்வது போன்றவை காலம் காலமாக நடக்கும் ஒன்றுதான். ஆனால் சமீபகாலமாக மாணவர்களின் படிக்கட்டு பயணம் தமிழகம் முழுவதும் பரவலாக பல ஊர்களில் அன்றாடம் காணக்கூடிய அதிர்ச்சி தரும் காட்சியாக உள்ளது. குறிப்பிட்ட வழித்தடங்களில் மிகக்குறைவான பஸ்கள் இயக்கப்படுவது, நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் சேவை இல்லாமை போன்றவை, இப்படி படிக்கட்டு பயணம் செய்வதற்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது.இதனால், சில நேரங்களில் விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக உள்ளது. 2 பேருக்கு மேல் நிற்க முடியாத பஸ் படிக்கட்டில் ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முண்டியடித்து கொண்டு ஏறி தொங்கி கொண்டு சென்று வருகிறார்கள். புத்தக பைகளையும் முதுகில் சுமந்து கொண்டு செல்லும் இத்தகைய மாணவர்களின் பஸ் படிக்கட்டு பயணம் என்பது கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்தான் உள்ளது.

மாணவர் பலி

கடந்த மார்ச் மாதம் திருச்சி, கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் பஸ் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர்களில் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த அக்டோபர் மாதம் உறையூர் பகுதியில் வாலிபர் ஒருவர் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தபோது, தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

போதுமான பஸ்கள் இல்லாமல் கூட்ட நெரிசல் காரணமாக படியில் தொங்குவது ஒருபுறம் என்றால், மாணவிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாகசம் செய்வதாக கருதி படிக்கட்டுகளில் தொங்கி தடுமாறி கீழே விழுந்து கைகால்களில் அடிபடுவதும் வாடிக்கையாக இருக்கிறது. தினம், தினம் காலை, மாலை நேரங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. இதை தடுக்க கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது:-

முண்டியடித்து ஏறும் நிலை

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் இளங்கோவன்:- பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்வதற்கு முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை 7 மணி முதல் 9 மணி வரை அடுத்தடுத்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டாலும் தங்களுக்கு வேண்டப்பட்ட நண்பர்கள், தோழிகள் வரும் பஸ்சுக்காக காத்திருந்து அந்த பஸ்சில் மாணவ-மாணவிகள் முண்டியடித்து ஏறி செல்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கல்லூரி நேரத்திற்காக முன்கூட்டியே இயக்கப்படும் பல பஸ்கள் வெறும் பஸ்களாக செல்வதையும் நம்மால் சில நேரங்களில் பார்க்க முடியும். பெற்றோர்கள் மாணவ- மாணவிகளை முன்கூட்டியே கல்லூரிகளுக்கு தயார் செய்து அனுப்பி கூட்டம் இல்லாத பஸ்களில் பயணம் செய்ய அறிவுறுத்தி அனுப்ப வேண்டும். மாணவ- மாணவிகள் ஒரே பஸ்சில் முண்டியடித்து ஏற முயற்சி செய்தாலும் பஸ்சில் ஏறும் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி செல்வதிலேயே அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். பஸ்சுக்குள் சென்று நிற்க முயற்சி செய்வதில்லை. இதன் காரணமாக எப்போதாவது ஏற்படும் அசம்பாவிதத்தில் மாணவர்கள் பாதிக்கப்பட்டாலும் அதைவிட அதிகமாக அந்த பஸ்சை இயக்கிய டிரைவரும், கண்டக்டரும் பாதிக்கப்படுகிறார்கள். மாணவ-மாணவிகளின் இது போன்ற அஜாக்கிரதையினால் போக்குவரத்து ஊழியர்களின் வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் போது மாணவ- மாணவிகள் அதனை பயன்படுத்த வேண்டும்.

அதோடு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ்களில் பயணிக்கும் நேரங்களில் பஸ் நிறுத்தங்களில் போலீசார் மேற்பார்வையிட்டு ஒரே பஸ்சில் முண்டியடித்து ஏறி செல்லாமல் அடுத்தடுத்த வரும் பஸ்களில் மாணவர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு ஜெயங்கொண்டம் முதல் தா.பழூர் வழியாக கும்பகோணம் வரை காலை நேரத்திலும், கும்பகோணம் முதல் தா.பழூர் வழியாக ஜெயங்கொண்டதிற்கு மாலை நேரத்திலும் கல்லூரி மாணவிகள் பயன்படுத்தும் வகையில் மகளிர் மட்டும் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் தனிப்பட்ட ஒரு பஸ்சை மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்து முண்டியடித்து ஏறும் நிலை மாறும். மாணவ-மாணவிகள் விபத்து ஏற்படாமல் பள்ளி, கல்லூரிக்கு சென்று வர கூடிய நிலை ஏற்படும்.

தனி பஸ் இயக்க வேண்டும்

அரியலூரை சேர்ந்த பள்ளி மாணவி மகாலட்சுமி:- நான் அஸ்தினாபுரம் அரசு மாதிரி பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறேன். தினமும் பள்ளிக்கு அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து அரசு பஸ்சில் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது டிரைவர் மற்றும் கண்டக்டர் பஸ் கிளம்பும்போது ஏறி கொள்ளலாம் என கூறுகின்றனர். இதனால் பல நேரங்களில் பஸ்சில் கூட்ட நெரிசல் மற்றும் படிக்கட்டில் நின்று கொண்டும், தொங்கிக்கொண்டும் மாணவர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலால் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது சிரமமாக இருந்தாலும், அவர்களுக்கு அது பிரச்சினை இல்லை. ஆனால் மாணவிகளான எங்களுக்கு இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியில் சென்று தான் நாங்கள் படித்து வருகிறோம். எனவே அரசானது பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு பள்ளி நேரங்களில் மாணவிகளுக்கு என தனி பஸ் இயக்கினால் நன்றாக இருக்கும்.

அரும்பாவூரை சேர்ந்த சர்மிளா பானு:- பூலாம்பாடியில் இருந்து அரும்பாவூர் வழியாக பெரம்பலூர் செல்லும் டவுன் பஸ்சில் காலையில் ஏறி வேப்பந்தட்டைக்கு செல்கிறோம். அவ்வாறு செல்லும்போது பள்ளி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் அதிக அளவில் செல்வதால் பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் நின்றவாறு அதிக அளவில் பயணம் செய்கிறார்கள். இதுபோன்று மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு பெற்றோர்களும், பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மேலும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து காலை மற்றும் மாலை வேலைகளில் கிராமப்புறங்களுக்கு அதிக அளவில் டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் பெண்களுக்கு என நகர பஸ்கள் இயக்கினால் நன்றாக இருக்கும்.

அரியலூரை சேர்ந்த வக்கீல் கமலக்கண்ணன்:- அரியலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் இருந்து வரும் பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு வரக்கூடிய சூழ்நிலையே உள்ளது. இதற்கு காரணம் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் ஒரே நேரத்தில் செயல்படுவதும் மற்றும் சில கிராமங்களில் ஒரு சில பஸ்கள் நிற்காமல் செல்வதால் அடுத்து வரும் பஸ்சில் ஏறுவதாலும் இந்த நிலை ஏற்படுகிறது. எனவே அரசானது பள்ளி மாணவர்களுக்கென பள்ளி வேலைகளில் தனி பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் சிரமம் இன்றி பள்ளிக்கு வர உதவியாக இருக்கும். பஸ் படிக்கட்டில் பயணம் செய்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பலனில்லாத நிலையே உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்