கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைக்க வேண்டும்-யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை

வேதாளை சமத்துவபுரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைக்க வேண்டும் என்று யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2023-02-17 18:45 GMT

பனைக்குளம், 

வேதாளை சமத்துவபுரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைக்க வேண்டும் என்று யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

யூனியன் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், உச்சிப்புளி யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு யூனியன் ஆணையாளர் சண்முகநாதன், யூனியன் துணைத்தலைவர் பகவதி லட்சுமி முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக செலவின பட்டியலை யூனியன் உதவியாளர் சரவணன் வாசித்தார்.

இதை தொடர்ந்து கூட்டத்தில் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ஆணையாளர் சண்முகநாதன் ஆகியோர் பேசும் போது, ராமநாதபுரத்தில் முகவை சங்கமம் 5-வது புத்தக திருவிழா நடைபெற்று வருகின்றன. விழாவை மாவட்ட கலெக்டர் ஜானிடம் வர்கீஸ் சிறப்பாக செய்து உள்ளார்.. கவுன்சிலர்களும் கலந்துகொண்டு புத்தகத் திருவிழாவை கண்டுகளித்து தேவையான புத்தகங்களை வாங்கி படித்து பயன்பெறுங்கள்.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள். இதைத் தொடர்ந்து கவுன்சிலர்களின் விவாதம் நடைபெற்றன.

ேபனா நினைவு சின்னம்

தவுபீக் அலி (தி.மு.க.):-

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் நீண்ட காலமாக குடிநீர் வசதி இன்றி தவித்து வந்தனர். நமது மாவட்ட மக்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்த அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி கையெழுத்திட்ட பேனா நினைவுச் சின்னத்தை மண்டபம் ஒன்றியம் வேதாளை அருகாமையில் உள்ள சமத்துவபுரத்தில் அழகிய பூங்கா ஒன்று அமைத்து, பூங்காவின் மத்தியில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கையெழுத்திட்ட பேனாவை நினைவுபடுத்தும் வகையில் அமைத்திட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

சுப்புலட்சுமி ஜீவானந்தம் (யூனியன் தலைவர்), சண்முகநாதன் (ஆணையாளர்):-உங்களது கோரிக்கை நிறைவேற்றும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

முத்துச்செல்லம் (தி.மு.க.)

உச்சிப்புளியில் கோழிக்கழிவுகளை மக்கள் வசிக்க கூடிய இடங்களில் கொட்டுவதால் பொதுமக்களுக்கு தொடர்ந்து மர்ம காய்ச்சல் ஏற்படுகின்றது. எனவே பொது இடங்களில் கோழி கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்தடை

அஜ்மல் சரிபு (எஸ்.டி.பி.ஐ):-

புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது மின்தடை ஏற்படுகின்றன. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகநாதன் (ஆணையாளர்)

தொடர்ந்து உங்களது கோரிக்கைகள் மின்சார வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

சபியா ராணி (சுயே):-

அழகன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் தனியாருக்கு சொந்தமான கல்விக்கூடம் இயங்கி வருகிறது. அந்தப் பகுதி முழுவதும் குப்பைகள் அதிகரித்து உள்ளன. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகந்தி சோமசுந்தரம் (தி.மு.க):-

தாமரைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முக்கிய இடங்களில் இருட்டாக உள்ளன. அந்த பகுதிகளில் ஹைமாஸ் அல்லது சோலார் விளக்கு அமைத்து தர நடவடிக்கை எடுத்து எடுக்க வேண்டும்.

சண்முகநாதன் (ஆணையாளர்)

ஊராட்சியின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி கொடுத்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கவுன்சிலர்களின் விவாதம் நடைபெற்றன.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆறுமுகம், நித்தியா, பேச்சியம்மாள், சுகந்தி, மாரியம்மன், அலெக்ஸ், லட்சுமி, டிரோஸ், உஷா லட்சுமி, பேரின்பம் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். கூட்டத்தின் முடிவில் யூனியன் அலுவலக மேலாளர் சோம சுந்தர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்