சென்னையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வரும் 7ம் தேதி அமைதி பேரணி..!

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அவர்களின் 5வது நினைவு நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 7ம் தேதி அமைதி பேரணி நடைபெறுகிறது.

Update: 2023-08-01 10:44 GMT

Image Courtesy:Twitter@sunnewstamil

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து, கருணாநிதி அவர்களின் நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெறும் என தி.மு.க. அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,

தகைமைசால் தலைவராக – எழுத்தாளராக - கவிஞராக - சொற்பொழிவாளராக – திரைக்கதை வசனகர்த்தாவாக - இலக்கியவாதியாக - திரைப்பட தயாரிப்பாளராக - தலைசிறந்த நிர்வாகியாக - தமிழகத்தின் ஐந்து முறை முதலமைச்சராக - உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவரும், திராவிட இயக்கத்தின் போர்வாட்களில் ஒருவராக தமது பொதுவாழ்வை தொடங்கி, பின்னர், காஞ்சி தந்த காவிய தலைவர் அறிஞர் அண்ணா அவர்களோடு திராவிட முன்னேற்ற கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி, அண்ணா அவர்களின் மறைவுக்கு பிறகு, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்ட முத்தமிழறிஞர் தமிழின தலைவர் கலைஞர் அவர்களின் 5வது நினைவுநாளினையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., முதன்மை செயலாளர், துணை பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினர் கலந்து கொள்ளும் "அமைதி பேரணி", ஆகஸ்ட்-7, திங்கட் கிழமை அன்று காலை 8.00 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கழக செயலாளர்கள்- முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக, பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மகளிர் தொண்டர் அணி, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, நெசவாளர் அணி, சிறுபான்மையினர் நலஉரிமை பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய அனைத்து அணியினரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர் என சென்னை கிழக்கு - சென்னை வடக்கு - சென்னை வடகிழக்கு - சென்னை மேற்கு - சென்னை தென்மேற்கு - சென்னை தெற்கு ஆகிய மாவட்ட கழகங்களின் சார்பில் கேட்டு கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்