சேலத்தில் கடந்த 10 நாட்களாககோட்டை மாரியம்மன் சிலை மீது அமர்ந்த கிளியை காண பக்தர்கள் ஆர்வம்
சேலத்தில் கடந்த 10 நாட்களாக கோட்டை மாரியம்மன் சிலை மீது அமர்ந்த கிளியை காண பக்தர்கள் ஆர்வம் காட்டினர்.
சேலம்
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனால் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு சேலம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
இதனிடையே, கடந்த 21-ந்தேதி காலை பச்சைக்கிளி ஒன்று பறந்து வந்து அம்மன் சிலையின் கிரீடத்தின் மீது அமர்ந்தது. பின்னர் அந்த கிளி இரவு நீண்ட நேரம் ஆகியும் பறந்து செல்லாமல் சிலை மீது அங்கேயே இருந்தது. பிறகு மறுநாள் காலையில் கோவில் பூசாரிகள் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய வந்தபோதும், கிளி வேறு எங்கும் செல்லாமல் இருந்தது.
இதனால் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள், அம்மன் சிலை மீது கிளி அமர்ந்து இருப்பதை பார்த்து பரவசம் அடைந்து வருகின்றனர். நேற்றுடன் 10 நாட்களாக அம்மன் சிலை மீது கிளி அமர்ந்து இருக்கிறது. புரட்டாசி வெள்ளிக்கிழமை என்பதால் நேற்று கோவிலில் அம்மனை தரிசிக்கவும், கிளியை காணவும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் கூறுகையில், கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் கோட்டை பெரிய மாரியம்மன் கிளி ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். இதனை தரிசனம் செய்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோவிலில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது என்றார்.