செஸ் ஒலிம்பியாட் ஜோதியுடன் வீரர்களின் அணிவகுப்பு பேரணி
விழுப்புரத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியுடன் வீரர்களின் அணிவகுப்பு பேரணியை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான் ஒலிம்பியாட் ஜோதி வருகையையொட்டி அதற்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பரமேஸ்வரி தலைமை தாங்கி செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்றார். பின்னர் விழுப்புரம் மாவட்ட வீரர்களிடம் ஒலிம்பியாட் ஜோதியை வழங்கி விழிப்புணர்வு குறித்த வீரர்களின் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளதற்கு முன்னோட்டமாக தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒலிம்பியாட் ஜோதியை நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்று பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் மாவட்டந்தோறும் பல்வேறு இடங்களுக்கு சென்று நிறைவாக சென்னை மாமல்லபுரம் சென்றடைகிறது.
500-க்கும் மேற்பட்ட வீரர்கள்
அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு கோவை மாவட்டத்திலிருந்து ஒலிம்பியாட் ஜோதியை வீரர்கள் சக்திவேல், அபினேஷ் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் எடுத்து வந்தனர். அதன் பின்னர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வீரர் ஹேமச்சந்திரன் பெற்றுக்கொண்டு அவரது தலைமையில் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டு விழுப்புரம் நகரின் முக்கிய வீதியின் வழியாக பொதுமக்கள் பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் எடுத்துச்செல்லப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, பொதுப்பணித்துறை (கட்டிடம்) செயற்பொறியாளர் பரிதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் பாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.