தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது

8 பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

Update: 2023-09-29 18:45 GMT

நாகர்கோவில்:

8 பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

8 பிடிவாரண்டுகள்

நாகர்கோவில் பள்ளிவிளையை சேர்ந்தவர் வெள்ளை செந்தில் (வயது44). இவர் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இவரது பெயர் ரவுடி பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கு ஒன்றில் வெள்ளை செந்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இதையடுத்து அவருக்கு நாகர்கோவில் கோர்ட்டில் 2 பிடிவாராண்டுகள் பிறப்பிக்கப்பட்டது. இதேபோல் வடசேரி போலீஸ் நிலைய வழக்கு ஒன்றில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்ததால் அந்த வழக்கிலும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. மேலும் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலைய வழக்கில் 2 பிடிவாரண்டு, கடலூர் மாவட்ட வழக்கு ஒன்றில் ஒரு பிடிவாரண்டு, சென்னை மாவட்ட வழக்கில் 2 பிடிவாரண்டு என மொத்தம் 8 பிடிவாரண்டுகள் நிலுவையில் இருந்தன.

சென்னையில் கைது

போலீசார் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வெள்ளை செந்தில் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் சென்னைக்கு விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த வெள்ளை செந்திலை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து வெள்ளை செந்திலை போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்