ரூ.10 லட்சத்தில் புதிய பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழா
ரூ.10 லட்சத்தில் புதிய பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
இட்டமொழி:
நாங்குநேரி யூனியன் சங்கனாங்குளத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.10 லட்சத்தில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, புதிய பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, சங்கனாங்குளம் பஞ்சாயத்து தலைவர் எஸ்.சின்னத்தம்பி, யூனியன் துணைத்தலைவர் ஆர்.இசக்கிபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முனைஞ்சிப்பட்டி, முன்னீர்பள்ளம் அரசு மருத்துவமனைகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து தலா ரூ.3.60 லட்சத்தில் கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைக்காக வாங்கப்பட்ட புதிய அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் கருவியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர்கள் முத்துலட்சுமி (நாங்குநேரி), ஜஸ்டின் பொன்னையா (பாளையங்கோட்டை), டாக்டர்கள் அனிதா, பிரபு கந்தசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் அய்யப்பன், முத்துசாமி, சுகாதார ஆய்வாளர்கள் ராபின்ஸ்டன், சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து, களக்காட்டில் காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் நேற்று சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், ''நமது நாட்டில் மக்களாட்சிக்கு பதிலாக சர்வாதிகார ஆட்சியை பா.ஜ.க.வினர் நடத்துகின்றனர். ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகும் வரையிலும் எங்களது அறவழி போராட்டம் தொடரும். இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்போம்'' என்றார்.
முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், அழகியநம்பி, ஜார்ஜ், வில்சன், காளபெருமாள், மலையடிபுதூர் பஞ்சாயத்து தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.