சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் புதிய ஒருங்கிணைந்த முனையம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை நாளை (சனிக்கிழமை) பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்்.

Update: 2023-04-07 00:09 GMT

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாடு, பன்னாட்டு முனையங்களை இணைத்து புதிய ஒருங்கிணைந்த நவீன முனையம் அமைக்கும் பணி 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரதமா் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். ரூ.2,467 கோடியில், 2 லட்சத்து 20 ஆயிரத்து 972 சதுர மீட்டா் பரப்பில் இது கட்டப்பட்டு உள்ளது.

புதிய முனையத்தின் முதற்கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டன. தற்போது நவீன கருவிகள், உபகரணங்கள் பொருத்தப்பட்டு, கருவிகள், உபகரணங்களின் சோதனைகள் நடந்து வருகின்றன.

இந்த புதிய முனையத்தின் திறப்பு விழா முடிந்ததும் தற்போது பயன்பாட்டில் உள்ள பன்னாட்டு வருகை முனையம் கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கும். அதன் பிறகு 2-ம் கட்ட கட்டுமான பணி தொடங்கப்படும்.

இந்த புதிய முனையத்தில் கீழ்தளத்தில் விமான பயணிகளின் உடைமைகள் கையாளப்படும் பணிகள் கடந்த மாதம் 10-ந் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அதேபோல் புதிய முனையத்தில் அமைக்கப்பட்ட மல்டி லெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் மால், திரையரங்குகள் போன்றவைகளையும் கடந்த மாதம் 4-ந் தேதி விமான போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மோடி திறந்து வைக்கிறார்

இந்த நிலையில் இந்த புதிய முனையத்தின் செயல்பாட்டை பிரதமர் மோடி, நாளை (சனிக்கிழமை) சென்னை பல்லாவரத்தில் நடக்கும் விழாவில் முறைப்படி திறந்து வைக்கிறார்.

இதற்காக பிரதமர் மோடி ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் நாளை பகல் 2.45 மணிக்கு சென்னை வந்து சேருகிறார். பின்னர் உள்நாட்டு முனையத்தை பார்வையிடுகிறார். அதன்பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐ.என்.எஸ். சென்று, அங்கிருந்து காரில் சென்டிரல் ரெயில் நிலையம் செல்கிறார். அங்கு சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். பின்னர் ராமகிருஷ்ணா மடத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பல்லாவரம் வருகிறார்.

அங்கு ராணுவ மைதானத்தில் நடைபெறும் சென்னை விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழா மற்றும் நலத்திட்டங்கள் தொடக்க விழாவில் பங்கேற்கிறார். பின்னர் இரவு 8.45 மணிக்கு சென்னையில் இருந்து மைசூர் புறப்பட்டு செல்கிறார்.

டுவிட்டரில் கருத்து

இதற்காக சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம், புதிய முனையம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகியவை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையின் கீழ் வந்துள்ளது.

இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

தாம்பரம் கமிஷனர் ஆலோசனை

பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி தாம்பரம் மாநகர போலீஸ் எல்லையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் அனைத்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையில், தாம்பரம் மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர், 3 இணை கமிஷனர்கள், 13 துணை கமிஷனர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு போலீஸ்காரர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் உள்பட 4 ஆயிரம் போலீசார் மூலம் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் பல்லாவரத்தில் உள்ள ராணுவ மைதானம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும், செல்லும் வழித்தடங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமர் வருகையையொட்டி தாம்பரம் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 9-ந்தேதி வரை டிரோன்கள் மற்றும் ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்க தடை விதித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்