நாகையின் முக்கிய சாலைகளாக பப்ளிக் ஆபீஸ் ரோடு, வ.உ.சி. சாலை, நாகூர் மெயின், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த சாலைகளில் அதிவேகமாக வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக மாலை நேரங்களில் இளைஞர்கள் அதிக, 'சிசி' திறன் கொண்ட பைக்குகளில் அதிவேகமாக செல்வதால், பொதுமக்கள் விபத்தில் சிக்குகின்றனர். இதனை கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் போலீசாருக்கு ஒரு சாவாலாகவே இருந்து வந்தது. அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மூலம் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில், வாகனத்தின் வேகத்தை அளவிடும் கருவியை நேற்று மாவட்டத்தில் போலீஸ் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இதையடுத்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தலா 2 கருவிகளை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், போலீசாரிடம் ஒப்படைத்தார். அதிவேகமாக செல்லும் வாகனங்களின் எண்ணை சுலபமாக படம் பிடித்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அந்த அபராத தொகை நகல் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரின் செல்போனுக்கு அனுப்பப்படும். இதன் மூலம் விபத்துக்களை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தெரிவித்தார்.