மேற்கு மண்டலத்தில் புதிதாக ஜவுளிப்பூங்கா

மேற்கு மண்டலத்தில் புதிதாக ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என்று கோவை அருகே நெவாளர்கள் நடத்திய பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Update: 2023-03-11 18:45 GMT

விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக தமிழக அரசு உயர்த்தியது. மேலும் 1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் கூடுதல் மின்சாரத்திற்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தில் யூனிட்டுக்கு 70 பைசா குறைக்கப்படுவதாகவும் அறிவித்தது.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு

இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் சார்பில் கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று காலை 11 மணிக்கு கோவை வந்தார். பின்னர் சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதையடுத்து மாலை 5 மணிக்கு விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் சார்பில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நெசவாளர்களுக்கு உதவி

அதனைத்தொடர்ந்து விழாவில், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

"கைத்தறியாக இருந்தாலும், விசைத்தறியாக இருந்தாலும் ஆடை உற்பத்தி நெசவாளர்களுக்கு உதவி செய்வதை எனது கடமையாக கருதுகிறேன். தி.மு.க. தொடங்கிய காலம் முதல் நெசவாளர் துயர் துடைக்கும் இயக்கமாக இருந்து வருகிறது.

தி.மு.க ஆட்சிக்கு வரும் போது எல்லாம் நெசவாளர்களுக்கு உதவி செய்துள்ளது. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செய்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று, நூல் விலையேற்றம் என்ற தாக்கு தலில் சிக்கி இருந்த நேரத்தில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. நெசவா ளர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

பல திட்டங்கள்

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு சரிகை மையம் 1971-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

ஈரோட்டில் தமிழ்நாடு கூட்டுறவு பதனிடும் ஆலை 1979-ல் தொடங்கப்பட்டது. கூட்டுறவு கைத்தறி நெசவாளர் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நெசவாளர், முதியோர் ஓய்வூதிய திட்டம் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. 27,434 நெசவாளர்கள் இதனை பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

20 சதவீதம் தள்ளுபடி வழங்கும் திட்டம் 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நெசவாளர் வீட்டுகடன் தொகை அனைத்தையும் 2008-ம் ஆண்டு தி.மு.க. அரசு தள்ளுபடி செய்தது.

இந்த வரிசையில் இப்போது அமைந்துள்ள திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த தொழிலில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். நெசவாளர்கள் யாரும் கோரிக்கை வைக்காமலே ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளோம்.

மேலும் தனியாக ஆணையரகம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த காஞ்சிபுரம் அண்ணா கைத்தறி பூங்காபுத்துயிர் பெற்றுள்ளது.

நெசவாளர் குறைதீர்க்கும் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 24,684 பேருக்கு ரூ.120 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 10 ஆயிரம் நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நெசவுக்கூடம், பொதுவசதி மையம், சாய சாலைகள் திறந்து வைக்கப்பட்டது.

10 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பு ஊதியம் பெற்ற 406 தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

அடிப்படை கூலியில் 10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு லட்சம் நெசவாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.

1½ லட்சம் இலவச மின்சார இணைப்பு

மேலும் சிறந்த நெசவாளர், சிறந்த ஏற்றுமதியாளர், சிறந்த வடி வமைப்பாளர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கைத்தறி, கைவினைப்பொருட்கள் காட்சியகம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

நெசவாளர் கூட்டுறவு சங்கம் மூலம் வேட்டி, சேலை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்ட ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

இவை எல்லாம் 20 மாதங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

10 ஆண்டு கால அ.தி.முக ஆட்சியில் 2 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் 1½ லட்சம் இலவச வேளாண் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் மத்தியில் தி.மு.க. ஆட்சிக்கு நல்ல மதிப்பு ஏற்பட்டுள்ளது. சொன்னதை செய்வோம். செய்வதை சொல்வோம் என்பது கலைஞரின் முழக்கம். சொல்லாததையும் செய்வோம் என்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முழக்கம்.

நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

விலையில்லா மின்சாரம் கைத்தறிகளுக்கு 300 யூனிட்களாகவும், விசைத்தறிகளுக்கு 1000 யூனிட்களாகவும் உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளதால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.53 கோடி கூடுதல் செலவீனம் ஏற்படும்.

இதை செலவாக நினைக்கவில்லை. நெசவாளர்கள் புத்துயிர் பெறவும், அதிகமாக உற்பத்தி செய்யவும் இது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மின்கட்டண குறைப்பால் நெசவாளர்களுக்கு கணிசமான தொகை மிச்சமாகும்.

தொழிலை வளர்ச்சியடைய செய்யும் முயற்சியை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. 5 லட்சம் விசைத்தறிகளில் பணியாற்றும் 10 லட்சம் தொழிலாளர்களை காக்கும் கடமை அரசிற்கு உண்டு.

நெசவாளர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நூல் விலையை கட்டுப்படுத்த உறுதியாக நடவடிக்கை எடுப்போம்.

அரசின் அனைத்து துறைகளுக்கும் தேவையான துணிகள் கொள்முதல் செய்தல், அரசின் நிபுணர் குழுக்களில் நெசவாளர்கள் பிரதிநிதித்துவம் வழங்குதல் உள்ளிட்டவை முறையாக பரிசீலிக்கப்பட்டு படிப்படியாக உறுதியாக நிறைவேற்றப்படும்.

மேற்கு மண்டலத்தில் ஜவுளிப்பூங்கா

ஜவுளித்துறைக்கு ஆணி வேராக நெசவு தொழில் உள்ளது. நெசவு தொழிலில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் ஜவுளிப்பூங்காக்கள் உருவாக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது.

இதன்படி மேற்கு மண்டலத்தில் ஜவுளிப்பூங்கா புதிதாக அமைக்கப்பட உள்ளது. நெசவு தொழிலுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் தறி தொழிற்சாலை தனியிடத்தில் அமைத்து சலுகைகள் வழங்கப்படும்.

இது எனது அரசல்ல. நமது அரசு, உங்கள் அரசு. உங்களுக்கு உழைக்க தான் முதல்-அமைச்சராக அமர்ந்துள்ளேன்.

மக்களின் நம்பிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, அரசு மீது மக்களுக்கு இருக்கும் மகத்தான நம்பிக்கையை காட்டுகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மேற்கு மண்டலத்தில் தி.மு.க. எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி மூலம் அந்த நிலைமை மாறியுள்ளது.

மேற்கு மண்டலத்தில் செல்வாக்கு இருப்பதாக மார்தட்டிக் கொண்ட அ.தி.மு.க. என்ன சாதனை செய்துள்ளது? தொழில் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. சிறு, குறு நடுத்தர தொழில்களை அரசு ஊக்குவித்து வருவதால், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் சிறந்த அமைதியான மாநிலமாக உள்ளது. இது சிலரது கண்களுக்கு பொறுக்கவில்லை.

ஒற்றுமையாக மக்கள் வாழும் மாநிலம்

மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழும் மாநிலம் தமிழகம். அதை வதந்தி, பொய்களால் சிலர் சிதைக்க பார்க்கிறார்கள். வதந்தி, பொய்களால் களங்கத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். அவை எழுந்த வேகத்தில் அமுங்கி விடுகின்றன.

மக்களை திசை திருப்ப தந்திரங்களாக பொய்களையும், வதந்தி களையும் பயன்படுத்துகின்றனர். என் பொது வாழ்க்கையில் இது போன்ற எத்தனையோ பூச்சாண்டிகளை பார்த்து விட்டேன். இந்த சலசலப்பிற்கு எல்லாம் அஞ்சமாட்டேன். போற்றுவோர் போற்றட்டும். தூற்றுவோர் தூற்றட்டும். நான் தொடர்ந்து பணியாற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மு.பெ.சாமிநாதன், முத்துசாமி, காந்தி, கயல்விழி செல்வராஜ், கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ., அரசு அதிகாரிகள் ராஜேஷ் லகானி, கலெக்டர் கிராந்தி குமார், கோவை-திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பி.குமாரசாமி, விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் பூபதி, சோமனூர் சங்க துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், ஈஸ்வரன், சின்னசாமி, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, மாவட்ட துணை செயலாளர் பி.கே.சாமிநாதன், சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி. அன்பரசு, கருமத்தம்பட்டி நகர செயலாளர் நித்யா ஜி.மனோகரன், கொ.ம.தே.க. மாநில செயற்குழு உறுப்பினர் துரைசாமி, மாவட்ட செயலாளர் பிரீமியர் செல்வம், ஆடிட்டர் சேதுராமசாமி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்