கீழையூர் அருகே புதிய மின்சாதன பெட்டி அமைக்கப்பட்டது

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கீழையூர் அருகே சேதமடைந்த மின் சாதன பெட்டியை அகற்றி புதிய மின்சாதன பெட்டி அமைக்கப்பட்டது.

Update: 2023-04-18 18:45 GMT

வேளாங்கண்ணி:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கீழையூர் அருகே சேதமடைந்த மின் சாதன பெட்டியை அகற்றி புதிய மின்சாதன பெட்டி அமைக்கப்பட்டது.

மின்சாதன பெட்டி

கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகையில் கடைத்தெருவில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் மின்சாதன பெட்டி பொருத்தப்பட்டுள்ளது். இந்த மின்சாதன பெட்டியில், கடைத்தெரு பகுதி, சின்னகருங்கண்ணி, ஈ.சி.ஆர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 27 மின்கம்பங்களில் உள்ள மின்விளக்கு எரிவதற்கான மின் உபகரணம் (பீஸ்கேரியர்) இதில் அமைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் மின்உபகரணத்தை பொருத்தி மின்விளக்கை எரிய விடுவதும், அதேபோல காலையில் பொருத்திய மின் உபகரணத்தை எடுத்து மின்சாரத்தை துண்டிக்க செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் சுமார் 50-க்கும் மேல் கடைகள் உள்ளன.

உயிர்சேதம்

இந்த நிலையில் அந்த மின்கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்சாதனபெட்டி சேதமடைந்து திறந்த நிலையில் இருந்தது. இந்த பகுதி கடைத்தெரு என்பதால், கடைக்கு வரும் பொதுமக்கள் அதிக அளவில் அந்த இடத்தில் நின்று பேசிக்கொண்டிருப்பது வழக்கமாகி விட்டது.

அவ்வாறு குவியும் பொதுமக்கள் தெரியாமல் இதை தொட்டால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை பார்வையிட்டு மாற்றம் செய்து தர வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

அதிகாரிகள் நடவடிக்கை

இது குறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளிவந்தது. அதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேதம் அடைந்த மின் சாதன பெட்டியை மாற்றம் செய்து புதிய மின்சாதன பெட்டியை அமைத்தனர்.

அதைதொடர்ந்து புதிய மின்சாதன பெட்டி அமைத்துகொடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

---

(செய்திக்கு முன்)கீழையூர் அருகே மேலப்பிடாகையில் சேதமடைந்த மின்சாதன பெட்டியையும், (செய்திக்கு பின்) புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட மின்சாதன பெட்டியையும் படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்