செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இந்தியில் பெயர்ப்பலகையா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இந்தியில் பெயர்ப்பலகையா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்.

Update: 2022-07-14 18:49 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் இந்தியும் திணிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட நிறுவனத்தின் பெயர்ப்பலகையில் கடந்த காலங்களில் இல்லாத வகையில் இந்தி திணிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இதை ஏற்க முடியாது.

அதேபோல், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இணையதளத்திலும் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான மொழித்திணிப்பு. செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தலைவர் பதவியில் தமிழக முதல்-அமைச்சர்தான் நியமிக்கப்படுகிறாரே தவிர, மத்திய நிறுவனம் என்பதால் மத்திய மந்திரிகளோ, கவர்னரோ நியமிக்கப்படுவதில்லை.

இந்த நிறுவனத்தின் கட்டிடத்திற்கான நிலத்தை வழங்கியது தமிழக அரசுதான். அவ்வாறு இருக்கும் போது, தமிழாய்வு நிறுவனத்திற்கு இந்தியில் பெயர்ப்பலகை வைத்தது நியாயப்படுத்த முடியாத தவறு.

எனவே இந்தி எழுத்துகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். முதல்-அமைச்சர் இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி நிறுவனத்தின் தனித்துவத்தை காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்