கடன் பிரச்சினையை தீர்க்கஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நகராட்சி தொழிலாளி :திருக்கோவிலூரில் பரபரப்பு

திருக்கோவிலூரில் கடன் பிரச்சினையை தீர்க்க ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நகராட்சி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-11 18:45 GMT


திருக்கோவிலூர், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்த வாலிபர் ஒருவர் திடீரென ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதை ஏ.டி.எம். பராமரிப்பு தொழில்நுட்ப ஊழியரான திருக்கோவிலூர் சன்னதி தெருவில் வசிக்கும் ராமலிங்கம் மகன் கார்த்திக்கண்ணன் (வயது 38) என்பவர் பார்த்து, திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், ராஜசேகர் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, அந்த மர்ம நபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர், திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் சிவராஜ் (32) என்பதும், அவர் திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

கடன் பிரச்சினை

மேலும் தனக்கு அளவுக்கு அதிகமாக உள்ள கடன் பிரச்சினையை தீர்க்க, பணம் தேவைப்பட்டது. இதனால் ஏ.டிஎம். எந்திரத்தை உடைக்க முடிவு செய்தேன். இதற்காக இரும்பு பொருட்களை அறுக்கும் ஆக்சா பிளேடு உடன் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து எந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்ததாக சிவராஜ் கூறினார்.

இதையடுத்து சிவராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்