முத்துமாரியம்மன் கோவிலில் மலைபோல் குவிந்த பூக்கள்
முத்துமாரியம்மன் கோவிலில் மலைபோல் பூக்கள் குவிந்தது.
அன்னவாசல்:
பூக்களை சாற்றி வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி பூச்சொரிதல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலுக்கு புதுக்கோட்டை, கீரனூர், அன்னவாசல், திருவரங்குளம் மேட்டுப்பட்டி கேட் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பூக்களை ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்டனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு வரை பூக்களை கோவிலுக்கு பக்தர்கள் கொண்டு வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பூக்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டன. இதில் மூலஸ்தானம் கருவறை முழுவதும் பூக்களால் நிரம்பி, அதற்கு அடுத்த அறையும் நிரம்பி, பக்தர்கள் வழிபடும் இடம் அருகே வரை பூக்கள் குவிந்தன.
சிறப்பு அலங்காரம்
இந்த நிலையில் அம்மனுக்கு பூக்கள் அனைத்தும் சாற்றப்பட்ட பின் நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டது. இதில் மலை போல் குவிந்து கிடந்த பூக்களுக்கிடையே அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மனின் திருமுகம் மட்டுமே தெரிந்தது. அம்மனை பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்து, மனமுருகி வேண்டினர்.
அம்மனுக்கு சாற்றப்பட்ட பூக்களை பக்தர்களுக்கு கோவில் குருக்கள் வினியோகித்தனர். இதைத்தொடர்ந்து கோவிலில் பங்குனித்திருவிழா வருகிற 2-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 10-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.