வீடுகளில் அட்டகாசம் செய்த குரங்கு பிடிபட்டது
திருச்செந்தூர் அருகே வீடுகளில் அட்டகாசம் செய்த குரங்கு பிடிபட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே காயாமொழி கிராமத்தில் கடந்த 6 மாத காலமாக குரங்கு அட்டகாசம் அதிக அளவு இருந்து வந்தது. பகலில் கூலி வேலைக்கு சென்ற வீடுகளில் சமைத்து வைத்த உணவுகளை சாப்பிடுவது மட்டுமல்லாமல் சிதறிவிட்டு சென்றன. இதனால் அந்த பகுதி மக்கள் வனத்துறையினரிடம் பலமுறை குரங்கை பிடித்து செல்ல கோரிக்கை மனு கொடுத்தனர். வனத்துறையினர் பலமுறை கூண்டு வைத்து பிடிக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் குரங்கு சிக்க வில்லை.
இந்தநிலையில் நேற்று முன்தினம் திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் கனிமொழி அரசு தலைமையில் வனச்சரக டாக்டர் மனோகரன் உள்ளிட்ட குழுவினர் குரங்குக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த குரங்கை பாதுகாப்பாக கூண்டில் அடைத்து களக்காடு வனப்பகுதியில் விட்டனர். இந்த குரங்கை பிடித்து சென்றதால் காயாமொழி கிராம மக்கள் நிம்மதியடைந்தனர். களக்காடு வனப்பகுதியில் குரங்கு நன்றாக இருப்பதாக வனத்துறை அதிகாரி கனிமொழி அரசு தெரிவித்தார்.