தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு நவீன சக்கர நாற்காலி
சின்னமனூரில் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு நவீன சக்கர நாற்காலியை கலெக்டர் முரளிதரன் வழங்கினார்.
சின்னமனூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சரவணவேல். இவர் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. தினமும் 2 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து பள்ளிக்கு வருகிறார். இதனால், அவருடைய பெற்றோர் தனது மகனுக்கு பேட்டரியுடன் கூடிய நவீன சக்கர நாற்காலி வழங்கக்கோரி கலெக்டரிடம் சில நாட்களுக்கு முன்பு மனு கொடுத்தனர். அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு பேட்டரி பொருத்திய 12 நவீன சக்கர நாற்காலிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டன. இதை அறிந்த கலெக்டர் முரளிதரன், அதில் ஒரு சக்கர நாற்காலியை சின்னமனூர் நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு எடுத்து வருமாறு கூறினார். கலெக்டரும் அந்த பள்ளிக்கு நேரில் சென்றார். அங்கு மாணவர் சரவணவேலிடம் சக்கர நாற்காலியை கலெக்டர் வழங்கினார். பின்னர், அந்த பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் முறை குறித்து ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். அத்துடன், மீதமுள்ள 11 சக்கர நாற்காலிகளையும் உரிய பயனாளிகளின் வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கவும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.