தொழில் அதிபரிடம் இருந்து பறித்த 550 பவுன் நகையை மற்றொரு காதலனிடம் கொடுத்த மாடல் அழகி

பூந்தமல்லி தொழில் அதிபரிடம் பறித்த 550 பவுன் நகையை தனது மற்றொரு காதலனிடம் கொடுத்து வைத்து இருப்பதாக போலீசாரிடம் மாடல் அழகி சுவாதி தெரிவித்தார்.

Update: 2022-08-18 21:04 GMT

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்தவர் சேகர் (வயது 47). தொழில் அதிபரான இவர், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இனிப்பு கடை வைத்து உள்ளார். பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இவர், தனது சொந்த வீட்டிலேயே தாய், மனைவி என குடும்பத்தினரின் 550 பவுன் நகையை திருடி தனது கள்ளக்காதலியும், மாடல் அழகியுமான வேளச்சேரியை சேர்ந்த 22 வயதான சுவாதிக்கு பரிசாக கொடுத்தார். அத்துடன் கார், ரூ.30 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் வாங்கி கொடுத்தார்.

இதுபற்றி சேகரின் தாய் அளித்த புகாரின்பேரில் பூந்தமல்லி போலீசார் சேகர் மற்றும் சுவாதி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் தொழில் அதிபர் தன்னிடம் நகை எதையும் தரவில்லை என சுவாதி மறுத்தார்.

இதனால் சேகரிடம் இருந்து சுவாதி பறித்த நகைகளை மீட்க இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். அதன்படி சுவாதியை 5 நாட்களும், சேகரை 3 நாட்களும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. இருவரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

மற்றொரு காதலனிடம்...

போலீஸ் விசாரணையில் மாடல் அழகி சுவாதி பரபரப்பு தகவல்களை தெரிவித்தார். போலீசாரிடம் சுவாதி அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

எனது அழகில் மயங்கிய சேகர், அவரது வீட்டில் இருந்து நகைகளை எடுத்து வந்து எனக்கு அணிவித்து அழகு பார்ப்பார். பின்னர் அந்த நகைகளை எனக்கே கொடுத்து விடுவார். சேகர் வாங்கி கொடுத்த நகைகள், விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள், பணம் ஆகியவற்றை எனது மற்றொரு காதலனான ஜெரீன் என்பவரிடம் கொடுத்து வைத்து உள்ளேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஜெரீன் வீட்டுக்கு சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அவரது வீட்டில் இருந்து சேகர் தனது ஆசை நாயகி சுவாதிக்கு ஆசையாக வாங்கி கொடுத்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் புல்லட் ஆகிய 2 வாகனங்களையும், 100 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையில் போலீசார் வருவதை அறிந்ததும் ஜெரீன் தப்பி ஓடிவிட்டார். மேலும் ஜெரீன் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பெண்களை மிரட்டி பணம் பறிப்பு

ஜெரீன், வசதியான வீட்டுப்பெண்களை குறி வைத்து அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி நெருங்கி பழகி பணம் பறிப்பவர் என தெரியவந்தது. மேலும் வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் மனைவி, குடும்ப பிரச்சினையில் சிக்கி தவிக்கும் வசதியான வீட்டுப்பெண்கள், கணவரை பிரிந்து வாழும் வசதியான பெண்களையும் குறி வைத்து அவர்களிடம் நெருங்கி பழகுவார்.

பின்னர் அந்த பெண்களிடம் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவார். மேலும் அந்த பெண்களை மிரட்டியும் நகை, பணத்தை பறித்து வந்துள்ளார். சுவாதி கொடுத்த நகை, பணத்துடன் தலைமறைவாக உள்ள ஜெரீனை போலீசார் தேடி வருகின்றனர். அவர் சிக்கினால்தான் இதுபோல் வேறு யாரையெல்லாம் ஏமாற்றி நகை, பணம் பறித்துள்ளார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

சிறையில் அடைப்பு

இதற்கிடையில் சேகரிடம் 3 நாட்களும், சுவாதியிடம் 5 நாட்களும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கி இருந்தது. ஆனால் 2 நாட்களிலேயே இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி முடித்துவிட்டனர். இதையடுத்து நேற்று 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மீண்டும் சிறையில் அடைத்தனர்.

சேகரிடம் மாடல் அழகி சுவாதி பறித்த 550 பவுன் நகையில் தற்போது 100 பவுன் நகையை மட்டும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். மீதம் உள்ள 450 பவுன் நகையையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நகைகளுடன் தங்க கட்டிகளாகவும் கொடுத்து இருப்பதால் அவற்றை மீட்பதில் சிரமம் ஏற்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் மீதம் உள்ள நகை மற்றும் பணத்தை மீட்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்