நடமாடும் பரிசோதனை கூட வாகனம்

உணவு பொருட்களின் தரத்தை அறிந்து கொள் வதற்காக நடமாடும் பரிசோதனை கூட வாகனத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-03 19:14 GMT

பரிசோதனை கூட வாகனம்

கடலூர் மாவட்டத்தில் உணவு பொருட்களை பரிசோதனை செய்து, அதன் தரத்தை தெரியப்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடமாடும் உணவு பரிசோதனை கூட வாகனம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த வாகனத்தை நேற்று மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தனது அலுவலகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நடமாடும் வாகனம், கடலூர் மாவட்டத்தில் வருகிற 21-ந்தேதி வரை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனங்கள், குறிப்பாக பால் உற்பத்தியாளர்கள், நடமாடும் பால் விற்பனையாளர்கள், சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள், குடிசை தொழிலாக உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்பவர்கள், துரித உணவகங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகள், மளிகை பொருட்கள், இனிப்பு மற்றும் பலகார வகைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து அதன் தரத்தை தெரியப்படுத்துவார்கள்.

தரமானதாக உள்ளதா?

தரக்குறைவு இருந்தால் அதனை சரிசெய்து, எதிர்காலத்தில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்குவதற்கு வணிகர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும், பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்கள் தரமானதாக உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. இந்த நடமாடும் வாகனத்தில் உணவு பகுப்பாய்வாளர் சரவணன், உணவை இலவசமாக பரிசோதனை செய்து முடிவை அறிவிப்பார்.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உணவு பாதுகாப்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்கள் பகுதியில் நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை தெரிந்து கொண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்