செம்பட்டி அருகே ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் அதிசய பசு

செம்பட்டி அருகே ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் அதிசய பசுவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Update: 2023-04-09 20:45 GMT

செம்பட்டி அருகே ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் அதிசய பசுவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

அதிசய நிகழ்வுகள்

கடவுள் படைத்த அனைத்து உயிர்களுக்கும் தாய்மை என்பது ஒரு வரம். தாய்மைக்கு ஈடுஇணை எதுவுமில்லை. ஐந்தறிவு கொண்ட ஜீவன்களிடம், தாய்மை உணர்வு மேலோங்கி இருப்பதை அவ்வப்போது நாம் கண்கூடாக பார்த்திருப்போம்.

நாய்க்குட்டிக்கு ஆடு பால் கொடுப்பது, நாயிடம் பூனை பால் பருகுவது போன்ற அதிசய நிகழ்வுகள் இந்த உலகில் ஆங்காங்கே நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதுபோன்ற ஒரு நெகிழ்ச்சி சம்பவம், திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் ஒரு தோட்டத்தில் அரங்கேறி இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

ஆத்தூர் காமராஜர் அணை அருகே அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் அவரது மகன் கணபதி கொட்டகை அமைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இதில், ஒரு பசு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கன்று ஈன்றது. இதையடுத்து தனது கன்றுக்கு பசு பால் கொடுத்து வந்தது.

பால் கொடுக்கும் பசு

இதற்கிடையே கணபதி வளர்த்து வரும் வெள்ளாடும், கடந்த ஒருவாரத்திற்கு முன்பு 2 குட்டிகளை ஈன்றது. இந்த 2 ஆட்டுக்குட்டிகளும் ஒரு வாரம் வரை தனது தாய் ஆட்டிடம் பால் அருந்தியது.

இந்தநிலையில் அங்கிருந்த பசு, தனது கன்றுக்கு பால் கொடுப்பதை பார்த்த 2 ஆட்டுக்குட்டிகளும், பசுவிடம் சென்று பால் குடிக்க முயன்றது. பொதுவாக மாற்று விலங்கின குட்டிகள், பசுவிடம் பால் அருந்த வந்தால் அனுமதி அளிப்பதில்லை. முட்டி தள்ளிவிடும். ஆனால் இந்த பசு, "ஊரான் வீட்டு பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும்" என்று எண்ணியதோ என்னவோ தெரியவில்லை. தன்னை நாடிதேடி வந்த 2 ஆட்டுக்குட்டிகளையும் அரவணைத்தது. மேலும் மடியில் சுரந்த பாலை, ஆட்டுக்குட்டிகளுக்கு தாய்மையுள்ளத்தோடு கொடுத்தது. மேலும் தனது கன்றை நாக்கால் நீவி விடுவது போன்று, ஆட்டுக்குட்டிகளையும் பசு நீவி விட்டது.

பொதுமக்கள் ஆச்சரியம்

இவ்வாறு 2 ஆட்டுக்குட்டிகளும் தனது தாய் ஆட்டிடம் பால் குடிப்பதை நிறுத்திவிட்டு, எப்போதெல்லாம் பசி எடுக்கிறதோ அப்போதெல்லாம் நேராக ஓடிச்சென்று பசுவிடம் பால் குடிப்பதை தற்போது வழக்கமாக கொண்டிருக்கின்றன.

இதனை ஆச்சரியத்துடன் பார்த்த கணபதி, கன்றுக்குட்டியும், 2 ஆட்டுக்குட்டிகளும் பசுவிடம் பால் குடிப்பதால் பசுவிடம் இருந்து பால் கறப்பதை குறைத்துக்கொண்டார். ஆறறிவு படைத்த மனிதர்களே ஒருவருக்கொருவர் உதவி செய்ய தயக்கம் காட்டும் தற்போதைய உலகில், தாய்மையுள்ளத்தோடு மாற்று விலங்கினமான ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் இந்த அதிசய பசுவை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்