ரேஷன் அரிசி கடத்தி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்து

விழுப்புரத்தில் பூண்டு மூட்டைக்குள் மறைத்து ரேஷன் அரிசியை கடத்தி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2023-02-15 18:45 GMT


திருச்சியில் இருந்து சென்னை நோக்கி நேற்று காலை ஒரு மினி வேன் சென்றுகொண்டிருந்தது. இந்த மினி வேன், விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலம் அருகில் காலை 8.30 மணியளவில் வந்தபோது மினி வேனின் ஆக்ஷில் கட்டாகி முன்சக்கரம் கழண்டுவிடும் நிலை ஏற்பட்டது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் நிலைதடுமாறி நடுரோட்டிலேயே தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே அதன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மினி வேனில் இருந்த சாக்கு மூட்டைகளும் நடுரோட்டில் விழுந்து கிடந்தது. அந்த சாக்கு மூட்டையினுள் பூண்டுகளும், அரிசியும் இருந்தது.

ரேஷன் அரிசி கடத்தல்

இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து, விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது விபத்துக்குள்ளான மினி வேனில் இருந்தது ரேஷன் அரிசி என கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் இதுகுறித்து தாலுகா போலீசார், விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பறிமுதல்

அப்போது மினி வேனில் மொத்தம் 30 சாக்கு மூட்டைகளில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், 5 மூட்டைகளில் பூண்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், மினி வேனில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க அந்த அரிசி மூட்டைகளுக்கு மேல் பூண்டு மூட்டைகளை வைத்து நூதன முறையில் ரேஷன் அரிசியை கடத்தி வந்ததும், வாகனத்தின் ஆக்ஷில் கட்டாகி விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், பூண்டு மூட்டைகளையும் மற்றும் மினி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த ரேஷன் அரிசியை கடத்தி வந்த டிரைவர் யார்? அரிசி கடத்தலில் யார், யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, எங்கிருந்து இவற்றை கடத்திக்கொண்டு வந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு தப்பி ஓடிய மினி வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பூண்டு மூட்டைக்குள் மறைத்து வைத்து ரேஷன் அரிசியை கடத்தி வந்த மினி வேன் விபத்தில் சிக்கிய சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்