மரக்கிளையில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய மினி லாரி
பாவூர்சத்திரம் அருகே மரக்கிளையில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய மினி லாரியால் பரபரப்பு ஏற்பட்டது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் இந்திரா நகர் பகுதிக்கு செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்கே மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. இதனால் அந்த வழியாக அரசு பஸ்கள், கனரக லாரிகள் உள்ளிட்டவை செல்லும்போது மரக்கிளையில் உரசுவதாகவும், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலை துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் பாவூர்சத்திரம் மாடக்கண்ணுபட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தனது கூண்டு கட்டிய மினி லாரியில் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் கேன் போட்டுவிட்டு மீண்டும் ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மினி லாரியின் கூண்டு பகுதி மரக்கிளையின் மீது மோதி அந்தரத்தில் தொங்கியது. இதனை கண்டதும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து அந்தரத்தில் தொங்கிய மினி லாரிக்குள் இருந்த சுப்பிரமணியை பத்திரமாக மீட்டு, லாரியையும் மரக்கிளையில் இருந்து இறக்கினர். இச்சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.