சென்னிமலையில் டயர் வெடித்து நடுரோட்டில் நின்ற மினி லாரி; போக்குவரத்து பாதிப்பு
சென்னிமலையில் டயர் வெடித்து நடுரோட்டில் நின்ற மினி லாரி; போக்குவரத்து பாதிப்பு
சென்னிமலை
பெருந்துறை சிப்காட்டில் இருந்து கால்நடை தீவன மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று நேற்று காலை 7 மணி அளவில் சென்னிமலையில் உள்ள தினசரி மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியின் பின்புற டயர் டமார் என வெடித்தது. இதனால் மேற்கொண்டு வேன் செல்ல முடியாமல் அப்படியே நடுரோட்டில் நின்று விட்டது.
பெருந்துறை மற்றும் ஈரோடு ஆகிய ஊர்களில் இருந்து வரும் 2 ரோடுகளும் ஒன்றாக இணையும் இடத்தில் வேன் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை 8 மணிக்கு மேல் அந்த வழியாக பெருந்துறை மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ஏராளமான பள்ளி, கல்லூரி வேன்கள், பஸ்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் லாரிகள் ஆகியவை வரிசையாக வந்ததால் தினசரி மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பள்ளி, கல்லூரி வாகனங்கள் விரைவாக செல்லும் வகையில் ஈரோடு மற்றும் பெருந்துறையில் இருந்து சென்னிமலை பஸ் நிலையத்துக்கு வந்த அரசு டவுன் பஸ்களை அப்படியே திருப்பி அனுப்பினார்கள். இதனால் அந்த பஸ்களில் வந்த பயணிகள் நடந்தே பஸ் நிலையத்துக்கு சென்றனர். சுமார் 4 மணி நேரத்துக்கு பிறகு மினி லாரியின் டயர் மாற்றப்பட்டது. அதன்பின்னர் லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.