அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கறவை மாடு பலி
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கறவை மாடு பரிதாபமாக செத்தது.;
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், கரடிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி(வயது 60). இவர் மேய்ச்சலுக்காக தனது பசு மாடு மற்றும் கன்றை ஓட்டிச்சென்றார். இந்நிலையில் நேற்று முன் தினம் காற்றுடன் பெய்த மழையின் காரணமாக விவசாய மின் இணைப்பிற்கு செல்லக்கூடிய மின் கம்பி அறுந்து கீழே கிடந்தது. அந்த வழியாக சென்ற பசுமாடு அந்த மின் கம்பியை மிதித்த நிலையில், மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக செத்தது. பசு மாட்டினை ஓட்டிச்சென்ற உரிமையாளர் சுதாரித்துக் கொண்டு அதிர்ஷ்டவசமாக கன்றுக்குட்டியுடன் உயிர் தப்பினார்.
இது குறித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கால்நடை மருத்துவ துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே பசுமாட்டிற்கு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இறந்த மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியரிடம் மாட்டின் உரிமையாளர் கலைமணி மனு அளித்துள்ளார்.