திருமணம் நடக்க வேண்டி பவானி கோவிலில் பரிகாரத்துக்காக சிவலிங்கத்தையே தூக்கிச் சென்ற வியாபாரி

திருமணம் நடக்க வேண்டி பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பரிகாரத்துக்காக சிவலிங்கத்தையே வியாபாரி ஒருவர் தூக்கிச் சென்ற சம்பவம் பவானியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-04-02 19:02 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம், பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறம் உள்ள பவானி கூடுதுறை திருமண தோஷம் நீங்க பரிகாரம் செய்வதற்கு உகந்த சிறந்த பரிகார தலமாகவும் விளங்குகிறது.

நேற்று காலை கோவில் ஊழியர்கள் பிரகாரத்தை சுற்றி வந்தனர். அப்போது கோவில் வில்வ மரத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை அங்கு காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது காலை 6.30 மணி அளவில் காவி வேட்டி அணிந்து கொண்டு வந்த பக்தா் சிவலிங்கத்தை அப்படியே தூக்கிச் சென்றதை கண்டனர். உடனே அவரை கோவில் ஊழியர்கள், பரிகார மண்டபத்தில் அவர் எங்கேனும் இருக்கிறாரா? என தேடினர். அப்போது அவர் சிவலிங்கத்தை வைத்து பரிகார பூஜை செய்து கொண்டிருந்ததை கண்டனர்.

திருமணம் ஆகவில்லை

உடனே அவரை அழைத்துக்கொண்டு வந்து ஊழியர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோவில் பகுதியில் உள்ள கடையில் தேங்காய், பழம் விற்பனை செய்பவர் என்பதும், 41 வயது ஆகியும் அவருக்கு திருமணம் ஆகவில்லை.

ஜோதிடர் ஒருவர் அந்த வியாபாரியிடம் சிவலிங்கத்தை வைத்து பரிகார பூஜை செய்தால் திருமணம் நடக்கும் என கூறி உள்ளார்.

மீண்டும் வில்வ மரத்தடியில்...

இதை நம்பிய அந்த வியாபாரி சிவலிங்கத்தை தூக்கிக் கொண்டு சென்று பரிகார பூஜை செய்ததும்,' தெரியவந்தது.

இதையடுத்து பரிகாரம் செய்வதற்காக தூக்கிக்கொண்டு சென்ற சிவலிங்கத்தை கோவில் ஊழியர்கள் கைப்பற்றி மீண்டும் வில்வ மரத்தடியில் வைத்தனர். அவரை கோவில் ஊழியர்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்