கவரிங் கடை உரிமையாளர் வீட்டில் கைவரிசை: நகை-பணத்துடன் ஓட்டம் பிடித்த மெக்கானிக்

சாணார்பட்டி அருகே கவரிங் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்தார். கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

Update: 2023-02-24 20:30 GMT

சாணார்பட்டி அருகே கவரிங் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்தார். கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

வீட்டுக்குள் மர்மநபர்

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டி பங்களா கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையா (வயது 65). இவர், திண்டுக்கல்லில் கவரிங் கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி ஜெயலட்சுமி (60).

நேற்று முன்தினம் மாலை ஜெயலட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு அருகே நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். சிறிதுநேரம் கழித்து அவர் வீடு திரும்பினார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் உள்ளே மர்ம நபர் ஒருவர் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

கட்டிலுக்கு அடியில் பதுங்கல்

பின்னர் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு திருடன், திருடன் என அவர் கூச்சல் போட்டார். ஜெயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதன்பிறகு கதவை திறந்து அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று தேடினர்.

அப்போது கட்டிலுக்கு அடியில் வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார். இதனைக்கண்ட பொதுமக்கள், அவரை மடக்கி பிடித்து வெளியே கொண்டு வந்தனர். அந்த வாலிபரை பார்த்த பொதுமக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது பிடிபட்ட நபர், அந்த பகுதியை சேர்ந்த ஜபருல்லா (34) என்று தெரியவந்தது. அப்பகுதி மக்களுக்கு அவர் நன்கு அறிமுகம் ஆனவர். இவர், சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

போலீசில் ஒப்படைப்பு

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் போலீசாரிடம், ஜபருல்லா ஒப்படைக்கப்பட்டார். அவரிடம், சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதாவது ஜபருல்லாவும், சாணார்பட்டி அருகே உள்ள எமக்கலாபுரத்தை சேர்ந்த கார்த்திக் (25) என்பவரும் நண்பர்கள். கார்த்திக் கோவையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவர், அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்த்திக் எமக்காலபுரம் வந்தார். பின்னர் ஜபருல்லாவும், கார்த்திக்கும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள வீட்டை நோட்டமிட்டு திருட திட்டமிட்டுள்ளனர்.

நகை, பணத்துடன் ஓட்டம்

இந்தநிலையில் ஜெயலட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு திருமணத்துக்கு செல்வதை அவர்கள் பார்த்தனர். இதனையடுத்து அவரது வீட்டின் பூட்டை உடைத்து 2 பேரும் உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 2½ பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரத்தை திருடினர்.

ஜெயலட்சுமி வீட்டுக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த நகை, பணத்துடன் கார்த்திக் வீட்டை விட்டு வெளியே ஓடி விட்டார். இன்னும் வீட்டில் வேறு நகை, பணம் இருக்கிறதா? என்று ஜபருல்லா வீட்டில் தேடி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து, ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்து விட்டார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத ஜபருல்லா பதற்றம் அடைந்தார். தப்பி செல்ல வழியின்றி கட்டிலுக்கு அடியில் அவர் பதுங்கி கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

கைது-வலைவீச்சு

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜபருல்லாவை கைது செய்தனர். மேலும் நகை, பணத்துடன் தப்பி ஓடிய கார்த்திக்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஜபருல்லாவுக்கு, வேறு ஏதேனும் திருட்டு வழக்குகளில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்