கடலூர், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலத்தில்செறிவூட்டப்பட்ட அரிசியால் சமைத்த உணவு வழங்கும் நிகழ்ச்சி

கடலூர், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியால் சமைக்கப்பட்ட உணவு பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-04-01 18:45 GMT


கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி (அதாவது நேற்று) முதல் செறியூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி செறியூட்டப்பட்ட அரிசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலூரில் நேற்று செறிவூட்டப்பட்ட அரிசியால் சமைக்கப்பட்ட உணவை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு குடிமை பொருள் தனி தாசில்தார் பூபாலசந்திரன் தலைமை தாங்கி, செறியூட்டப்பட்ட அரிசியால் சமைக்கப்பட்ட உணவை பொதுமக்களுக்கு வழங்கினார். கூட்டுறவு சார் பதிவாளர் சரண்யா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கண்காணிப்பாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் உதவி தர ஆய்வாளர் பிரபாகரன், கூட்டுறவு சார் பதிவாளர் வேலாயுதம் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

காட்டுமன்னார்கோவில்

இதேபோன்று காட்டுமன்னார்கோவிலில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கின் நுழைவுவாயிலில் நேற்று மதியம் பொதுமக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியினை பயன்படுத்தி சமைக்கப்பட்ட உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி உணவு வழங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் அன்புராஜ் முன்னிலை வகித்தார். இந்த அரிசியில் ரத்த சோகையை போக்கும் இரும்புச்சத்து, கரு வளர்ச்சி, ரத்த உற்பத்தி பண்ணும் போலிக் அமிலம், நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு ஏதுவாக வைட்டமின் பி 12 ஆகிய சத்துக்கள் அடங்கி உள்ளது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் தாசில்தார் தமிழ்ச்செல்வன், வட்ட வழங்கல் அலுவலர்அன்புராஜ் ஆகியோர் அமர்ந்து உணவை சாப்பிட்டு அச்சத்தை போக்கினர். இதில் உதவி தர அலுவலர் சிவராஜா, வருவாய் ஆய்வாளர் விக்னேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம்

விருத்தாசலம் வட்ட வழங்கல் துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியில் சமைத்த உணவு வழங்கும் நிகழ்ச்சி விருத்தாசலம் பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் நடந்தது. இதில் வட்ட வழங்கல் அலுவலர்கள் விருத்தாசலம் ஷானாஸ், வேப்பூர் பூர்ணிமா வினிதா, கூட்டுறவு சார்பதிவாளர் வினோத், தனி வருவாய் ஆய்வாளர் சுகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கின் கண்காணிப்பாளர் சிவ சண்முகம், உதவி தர ஆய்வாளர் காத்தமுத்து, இளநிலை தர ஆய்வாளர் முத்தமிழன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியில் சமைத்த உணவை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்