கட்டிட பணியின் போது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்ட கொத்தனார்

கட்டிட பணியின் போது மின்சாரம் பாய்ந்து கொத்தனார் தூக்கிவீசப்பட்டார்.;

Update: 2023-08-26 19:40 GMT

தா.பழூர்:

கட்டிட பணி

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் ஒருங்கிணைந்த வேளாண்மை துறை கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதில் பூச்சு வேலைகள் நடைபெற்று வந்தன. வெளிப்புற பூச்சுக்காக கட்டிடத்தின் வெளியே சாரம் அமைக்கும் பணியில் தா.பழூர் அருகே உள்ள நாச்சியார்பேட்டை காலனி தெருவை சேர்ந்த கொளஞ்சி (வயது 48) என்ற கொத்தனார் உள்பட தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். சாரம் கால் ஊன்றுவதற்கு பள்ளம் தோண்டப்பட்டு, அதில் இரும்பு தூணை நட முயற்சி செய்தனர்.

அப்போது கட்டிடத்தின் அருகில் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் இரும்புத்தூண் பட்டதில், மின்சாரம் பாய்ந்து கொளஞ்சி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அருகில் இருந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரம் மயக்க நிலையில் இருந்த அவர் சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கட்டிட பணியின் போது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்ட கொத்தனார்

அரசு கட்டிடம் கட்டப்படும் பகுதியில் கட்டிடங்களுக்கு குறுக்கே உயர் அழுத்த மின்பாதை செல்லும் நிலையில் கட்டுமான பணிகள் தொடங்கும்போது அதனை அகற்றி வேறு பாதை வழியாக மாற்றி அமைக்காததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் நின்றால் மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது.

எனவே வேளாண்மை துறை கட்டிடம் கட்டப்படும் வளாகத்தின் குறுக்கே செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை வளாகத்திற்கு வெளியே செல்லும் வகையில் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்