நிலக்கோட்டை டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு விஷம் குடித்துவிட்டு விசாரணைக்கு ஆஜராக வந்த கொத்தனார்
நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு, விசாரணைக்கு ஆஜராக விஷம் குடித்துவிட்டு வந்த கொத்தனாரால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு, விசாரணைக்கு ஆஜராக விஷம் குடித்துவிட்டு வந்த கொத்தனாரால் பரபரப்பு ஏற்பட்டது.
கொத்தனார்
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). கொத்தனார்.
இந்தநிலையில் கெங்குவார்பட்டி, வத்தலக்குண்டு, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த செலவில் வீடுகள் கட்டி தருவதாக ஒரு தனியார் தொண்டு நிறுவனம், பொதுமக்களிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரசாரம் செய்தது.
மேலும் இந்த நிறுவனத்தில் கட்டிடம் கட்டுவதற்காக கொத்தனார் தேவை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பிய செந்தில்குமார் அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
மோசடி புகார்
அப்போது அவரிடம், வத்தலக்குண்டு, கல்லுப்பட்டியில் உள்ள பொதுமக்களை வீடுகள் கட்டும் திட்டத்தில் சேர்த்து விடுமாறு அந்த நிறுவனத்தினர் கூறினர். இதற்கு பொதுமக்களிடம் முன்பணமாக குறிப்பிட்ட தொகையை வசூல் செய்ய அறிவுறுத்தினர்.
அதன்படி, செந்தில்குமார் தனக்கு தெரிந்தவர்களிடம் பணத்தை வசூல் செய்து தொண்டு நிறுவனத்தில் செலுத்தியுள்ளார். இதற்கிடையே பொதுமக்களிடம் வசூல் செய்த தொகையுடன் தனியார் தொண்டு நிறுவனத்தின் உரிமையாளர்கள், ஊழியர்கள் தலைமறைவாகிவிட்டனர். இதனால் வீடுகள் கட்டி தராதால் பணம் கொடுத்தவர்கள் செந்தில்குமாரிடம் பலமுறை கேட்டனர். அதற்கு அவரால் பதில் கூறமுடியவில்லை. மேலும் வீடுகள் கட்டி தருவதாக கூறி மோசடி செய்ததாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.
விஷம் குடித்தார்
இந்த புகார் தொடர்பாக, நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜராகுமாறு செந்தில்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து நேற்று செந்தில்குமார், தனது மனைவி ராணி மற்றும் 2 குழந்தைகளுடன் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அலுவலக வளாகத்தில் செந்தில்குமார் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, செந்தில்குமார் விஷம் குடித்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணைக்கு பயந்து செந்தில்குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.