மனைவியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை
மணல்மேடு அருகே மனைவியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
மணல்மேடு:
மனைவி கொலை
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன்(வயது 38). இவர் கடந்த 15 ஆண்டுகளாக குவைத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கலைவாணன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கையை சேர்ந்த கீர்த்திகா(28) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 4 வயதில் கமலேஸ்வரி மற்றும் 1 வயதில் மகிழினி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 30.5.23 அன்று கலைவாணன் குவைத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி தான் வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்பிய பணம் தொடர்பாக கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் கலைவாணன் தனது மனைவி கீர்த்திகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
ஜாமீனில் வந்தவர் தற்கொலை
இதுகுறித்த புகாரின் பேரில் கலைவாணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து கடந்த 6-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்த கலைவாணன் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த கலைவாணன, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட குடும்பத்தினர் மணல்மேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலைவாணனின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து கலைவாணனின் சகோதரர் தமிழ்வாணன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.