செவ்வாப்பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி பலி

செவ்வாப்பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-03-23 13:41 IST

செவ்வாபேட்டை - வேப்பம்பட்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் தண்டவாளத்தைக் கடக்கும் போது எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. நீல கலர் கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற திருவள்ளூர் ரெயில்வே போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி பஜாரில், நேற்று காலை பெரிய நத்தம் கிராமத்தை சேர்ந்த ஜீவா (வயது 26) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவருடன் கார்த்திக் (30) என்பவர் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது அதே திசையில் வந்த லாரி மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இந்த விபத்தில் ஜீவாவின் இரு கைகளும் துண்டானது. அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த கார்த்திக் காயம் இன்றி தப்பினார். விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் ஜீவா, சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த விபத்தால் கும்மிடிப்பூண்டி பஜாரில் போக்குவரத்து 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான விழுப்புரத்தை சேர்ந்த உத்தமராஜா (32) என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்