மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி 8 பவுன் நகை பறித்தவர் கைது

மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி 8 பவுன் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-16 19:25 GMT

திருச்சி கே.கே.நகர் சுந்தர்நகர் 7-வது கிராசை சேர்ந்தவர் செண்பகவள்ளி (வயது 70). சம்பவத்தன்று 45 வயது மதிக்கத்தக்க நபர் தனது சொந்த ஊர் கோவை என கூறி, தற்சமயம் கிருஷ்ணமூர்த்தி நகரில் குடியிருந்து வருவதாகவும், தற்போது குடியிருக்கும் வாடகை வீட்டை மாற்றவேண்டி உள்ளதால், வீடு வாடகைக்கு வேண்டும் என கேட்டுள்ளார். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் செண்பகவள்ளி தனது வீட்டின் காலியாக உள்ள மேல்தளத்திற்கு அழைத்து சென்றார். அப்போது அந்த நபர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் 1¼ பவுன் 2 தங்க வளையல்களை பறித்து கொண்டு தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகைகளை பறித்த ரஞ்சித் (41), என்பவரை கைது செய்து 8½ பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்