ஓட்டல் ஊழியரை காரில் கடத்தி ரூ.14 லட்சம் பறித்த வழக்கில் ஒருவர் கைது

ஓட்டல் ஊழியரை காரில் கடத்தி ரூ.14 லட்சம் பறித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-06 20:14 GMT

திருச்சி கிராப்பட்டி கான்வெண்ட் ரோட்டை சேர்ந்தவர் ரவி (வயது 52). இவர் கத்தார் நாட்டில் உள்ள பிரபல ஓட்டலில் மேற்பார்வையாளராக 2010-ம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக வேலை பார்த்தார். இவருக்கு மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்பட்டது. இதை சேமித்து வைத்து, திருச்சியில் ரூ.45 லட்சம் மதிப்பில் பழைய வீட்டை வாங்கியுள்ளார்.

பின்னர், விடுமுறை கேட்டபோது, ஓட்டல் நிர்வாகம் அவருக்கு விடுமுறை கொடுக்காமல் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதனால், ஓட்டல் உரிமையாளரிடம் சொல்லாமல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சொந்த ஊரான திருச்சிக்கு வந்து விட்டார். இந்நிலையில், கத்தாரில் இருந்து ரூ.1 கோடியை திருடிக்கொண்டு வந்துவிட்டதாக கூறி, ரவியை வணிகர் சங்க நிர்வாகி உள்பட 6 பேர் துணையுடன் கத்தாரில் உள்ள ஓட்டல் உரிமையாளர் காரில் கடத்தி, திருச்சியில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தனர். மேலும் ரவியின் மனைவி விஜயராணியை வரச்சொல்லி மிரட்டியுள்ளனர். பின்னர் ரூ.14 லட்சம் பெற்றுக்கொண்டதுடன், வெற்று காகிதங்களிலும் கையெழுத்து பெற்றுள்ளனர்.இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், ரவி திருச்சி கூடுதல் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில், கத்தாரில் உள்ள ஓட்டல் உரிமையாளர், வணிகர் சங்க நிர்வாகி, திருச்சியில் உள்ள ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஹரிகரன் உள்பட 7 பேர் மீதும் 15 பிரிவுகளின் கீழ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கடந்த ஆண்டு தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த ரவி, தங்களை கருணை கொலை செய்யக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தார். இந்தநிலையில் இந்த வழக்கில் ஹரிகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்