சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் தற்காலிக பஸ் நிலையம்

தற்காலிக பஸ் நிலையம் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.

Update: 2023-05-02 18:56 GMT

தாமரைக்குளம்:

தற்காலிக பஸ் நிலையம்

அரியலூர் நகராட்சியில் உள்ள பஸ் நிலையம் சேதமடைந்ததால், புதிய பஸ் நிலையம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து புதிய பஸ் நிலைய கட்டுமான பணி தொடங்கியதால், அரியலூர் புறவழிச்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல், அவசர கதியில் இங்கு பஸ் நிலையம் மாற்றப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை பெய்த பலத்த மழையின் காரணமாக தற்காலிக பஸ் நிலையம் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்கள் சென்றால் சகதியில் சக்கரங்கள் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாலும், பயணிகள் நடந்தால் சகதியில் வழுக்கி விழக்கூடிய நிலை இருப்பதாலும், பஸ்களை புறவழிச்சாலையின் இருபுறமும் நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர்.

விபத்து ஏற்பட வாய்ப்பு

இதனால் தற்காலிக பஸ் நிலையம் அருகில் உள்ள புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே டிப்பர் லாரிகளால் அதிக விபத்து ஏற்படும் சூழலில், தேசிய நெடுஞ்சாலையில் பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி, இறக்குவது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பயணிகள் கூறுகையில், சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இங்கு எவ்விதமான அடிப்படை வசதியும் இல்லாமல், அவசர கதியில் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று பெய்த மழையின் காரணமாக பஸ் நிலையம் முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.

அடிப்படை வசதிகள்

எனவே நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தற்காலிக பஸ் நிலையத்தில் தரைப்பகுதியை சீரமைத்து பயணிகளுக்கான நிழற்குடை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும். அதுவரை தற்காலிக பஸ் நிலையத்தை அரியலூர்-கல்லங்குறிச்சி சாலையில் மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர். இது குறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்டபோது, தற்காலிக பஸ் நிலையம் முழுவதும் கிராவல் மண் அடித்தால் நகராட்சிக்கு அதிக செலவாகும். பொதுமக்கள் நலன் கருதி சரி செய்யப்படும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்