வெளிநாட்டு பறவைகள் அதிகம் வருகை

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வருகை தருவது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

Update: 2023-01-29 19:02 GMT

பறவைகள் கணக்கெடுப்பு

பறவைகள் இனபெருக்கத்திற்காக பல்வேறு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆண்டு தோறும் வருகைபுரிகின்றன. அதன்படி வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலமான செப்டம்பர் மாதத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு பறவைகள் எண்ணிக்கை மதிப்பிடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழை முடிவடைந்துள்ள இச்சூழ்நிலையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.

அன்னவாசல் கண்மாய், ஆரியூர் கண்மாய், அருவாக்குளம், கவிநாடு கண்மாய், பொன்பேத்தி ஏரி, செய்யானம் ஏரி, கரகத்திக்கோட்டை கண்மாய், முத்துக்குடா கடல், கோடியக்கரை கடல், காரையூர் காரை கண்மாய், ஒலியமங்கலம் கண்மாய், ஏனாதி கண்மாய், கொன்னை கண்மாய், நீர்பழனி கண்மாய், ஔவையார்பட்டி கண்மாய், பேராம்பூர் கண்மாய், குளத்தூர் கண்மாய், திருமயம் தாமரை கண்மாய், பெல் ஏரி, நல்லம்மாள் சமுத்திரம் ஆகிய 20 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.

வெளிநாட்டு பறவைகள்

இந்த பணியானது காலையில் 6 மணி முதல் தொடங்கி பகல் 12 மணி வரை நடைபெற்றது. இதில் ஒரு பறவைகள் நிபுணர், 2 தன்னார்வலர்கள், 2 வனத்துறை அலுவலர்கள், ஒரு என்.ஜி.ஓ. மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடம்பெற்றிருந்தனர். பைனாகுலர் மூலம் பறவையை கண்டு, அதன் பெயரை ஒருவர் நோட்டில் குறிப்பெடுத்துக்கொண்டார்.

இதேபோல பறவையை கேமரா மூலமும் புகைப்படம் எடுக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பறவை இனங்கள் அதிக அளவில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்திருந்தது தெரியவந்தது. இதேபோல உள்நாட்டு பறவை இனங்களும் கணக்கெடுக்கப்பட்டன. ஆங்காங்கே கூட்டமாக பறந்த பறவைகளையும் கணக்கெடுத்துக்கொண்டனர். புதுக்கோட்டை வனசரக அதிகாரி தீபா தலைமையில் குழுவினர் அன்னவாசல் உள்ளிட்ட பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேவயைான உணவு

இப்பணிகள் மூலம் பறவைகளுக்கு தேவையான உணவு, நீர் மற்றும் இருப்பிடம் ஆகியவை போதுமான அளவில் கிடைக்க பெறுகின்றனவா? என்பதை ஆராய முடியும். கவிநாடு கண்மாயில் பறவைகள் தங்கியிருந்த பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட போது அங்கு மீன்பிடித்த சிறுவர்களை வனத்துறையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் எச்சரித்து அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்