இறந்த நிலையில் ஏராளமான மீன்கள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு

பாம்பன் குந்துகால் கடற்கரையில் பாசிகளுடன் இறந்த நிலையில் ஏராளமான மீன்கள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-18 18:30 GMT

ராமேசுவரம்,

பாம்பன் குந்துகால் கடற்கரையில் பாசிகளுடன் இறந்த நிலையில் ஏராளமான மீன்கள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குந்துகால் கடற்கரை

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியை சுற்றி 21 தீவுகள் உள்ளன. அது போல் இந்த 21 தீவுகளை சுற்றி உள்ள கடல் பகுதியில் கடல் பசு, டால்பின், ஆமை, பவளப்பாறைகள் மற்றும் பல அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.இதை தவிர இயற்கையாகவே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பல வகையான மீன்கள் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் தென்கடல் பகுதியான குந்துகால் கடற்கரை பகுதியில் நேற்று பலவகையான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தன. குறிப்பாக குமுளா, பாறை, சிரையா, முள்பேத்தை, பலூன் பேத்தை உள்ளிட்ட பல வகையான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தன.

இறந்த நிலையில் மீன்கள்

கடந்த சில நாட்களாகவே மன்னார்வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருவதால் கடலில் இருந்து அடித்துச் செல்லப்பட்ட ஏராளமான கடல் பாசிகளும் குந்துகால் கடற்கரையில் மலை போல் கரை ஒதுங்கி கிடக்கின்றன. பாசிகளோடு சேர்ந்து இந்த மீன்களும் சுவாசிக்க முடியாமல் கடல் சீற்றத்தின் வேகத்தால் இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

தற்போது 61 நாட்கள் தடைக்காலத்தை தொடர்ந்து விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாத நிலையில் நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகள் மட்டுமே மீன் பிடிக்க சென்று வருகின்றன. இவ்வாறு நாட்டுப் படகு, பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வலைகளில் சிக்கிய மீன்களை படகில் இருந்த படியே வலைகளில் இருந்து மீன்களை பிரித்தெடுக்கும் போது அதில் இந்த மீன்கள் கடலில் விழுந்து கடல் நீரோட்டத்தின் வேகத்தால் இந்த கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி தெளிவுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்