சாலையோரம் நின்ற கார் மீது லாரி கவிழ்ந்து குழந்தை உள்பட 2 பேர் பலி
சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது லாரி கவிழ்ந்து குழந்தை உள்பட 2 பேர் பலியானார்கள்.
திருச்சி,
நாமக்கல் மாவட்டம் பெரும்பாலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 51). இவரது மனைவி ராசாத்தி (43). இந்த தம்பதியின் மகன்கள் சஞ்சித் (24), ரஞ்சித் (22).இவர்கள் நேற்று காலையில் ஒரு காரில் புறப்பட்டு திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்களுடன் சஞ்சித்தின் நண்பரான ரமேஷ் (27), அவரது மனைவி பிரியா (24), இவர்களது மகள் சஞ்சனா (2) ஆகியோரும் வந்தனர். பின்னர் சாமியை தரிசனம் செய்து விட்டு மீண்டும் நாமக்கல் நோக்கி காரில் சென்றனர்.
லாரி கவிழ்ந்தது
காரை சஞ்சித் ஓட்டினார். திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாத்தலை என்ற இடத்தில் காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு ராஜா, சஞ்சித், ரஞ்சித், ரமேஷ் ஆகியோர் அருகே உள்ள கடையில் டீ குடிக்க சென்று விட்டனர்.
காரில் ராசாத்தி, பிரியா, குழந்தை சஞ்சனா ஆகிய 3 பேர் அமர்ந்திருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து உரம் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து உருண்டோடி அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது விழுந்தது.
2 பேர் சாவு
இதனால் லாரியின் அடியில் கார் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் காரில் அமர்ந்திருந்த ராசாத்தி, சஞ்சனா ஆகியோர் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். பிரியா படுகாயம் அடைந் தார்.
இந்த விபத்தினால் திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.