டயர் வெடித்ததால் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த லாரி
கொடைரோடு அருகே டயர் வெடித்ததால் சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.
மதுரை மாவட்டம் செக்கானூரணியில் இருந்து தார்கலவை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திண்டுக்கல் முத்தனம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை திருமங்கலம் அருகே உள்ள பொன்மங்கலத்தை சேர்ந்த அருண்பாண்டி (வயது 23) ஓட்டினார். திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில், கொடைரோட்டை அடுத்த மெட்டூர் மேம்பாலத்தில் லாரி வந்தது. அப்போது லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.
இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் சாலையோர தடுப்புகளை உடைத்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் அருண்பாண்டி காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் லாரியில் கொண்டு வந்த தார்கலவை சிதறியது. இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.