கோழிக்கழிவுகளை ஏற்றி வந்த லாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

Update: 2023-10-12 18:45 GMT

குலசேகரம்:

குலசேகரம் அருகே நள்ளிரவில் கோழிக்கழிவுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரிக்கு பேரூராட்சி நிர்வாகம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது.

வாகன சோதனை

கேரள மாநில பகுதியில் இருந்து கோழிக்கழிவுகளை லாரியில் ஏற்றி வந்து குமரி மாவட்ட எல்லை பகுதிகளில் அடிக்கடி கொண்டப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்காக போலீசார் மற்றும் பொதுமக்களும் இறைச்சி கழிவுகளுடன் வரும் வாகனங்களை மடக்கி பிடித்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.

ஆனாலும், கோழிக்கழிவுகள் வாகனங்களில் கொண்டு வந்து எல்லையில் கொட்டப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கன்டெய்னர் லாரி

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குலசேகரம் போலீசார் நாகக்கோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக ஒரு கன்டெய்னர் லாரி வந்தது. இதனால், சந்தேகமடைந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் லாரியில் பிளாஸ்டிக் பேரல்களில் துர்நாற்றத்துடன் கோழிக்கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து போலீசார் குலசேகரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

ரூ.25 ஆயிரம் அபராதம்

பின்னர் இதுபற்றி குலசேகரம் பேரூராட்சி நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி தலைவி ஜெயந்தி ஜேம்ஸ், செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் வந்தனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். போலீசார் லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில், கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு பொன்மனை அருகே உள்ள ஒரு பன்றி பண்ணைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.

கோழிக்கழிவுகள் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்ததால் லாரியை பறிமுதல் செய்து அங்கு நிறுத்தி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தினர் அந்த லாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். பின்னர், அந்த லாரியை கேரள பகுதிக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்